
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருப்போரூர் உப்பளம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இந்திய விமானப்படை விமானி பாராசூட் உதவியுடன் பத்திரமாக வெளியேறி, சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்போரூர் உப்பளம் பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், அப்பகுதி உப்பளத் தொழிலாளர்கள் உடனடியாக சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். அப்போது, ஒரு சிறிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.
விமானம் கீழே விழுவதற்கு முன்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை அறிந்த விமானி, துரிதமாகச் செயல்பட்டு, விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து தப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம், தாம்பரம் விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த பயிற்சி விமானம் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து தினம்தோறும் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சிறிய ரக பயிற்சி விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து வாங்கப்பட்டது என்றும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று, வியாழக்கிழமை, புதுக்கோட்டை அருகே ஒரு தனியார் பயிற்சி விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக மீண்டும் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.