
சென்னை புழல் சிவராஜ் தெருவில் வசித்து வந்தவர் பரதராமன் (61). கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இவரது வீட்டின் முன் அதே பகுதியை சேர்ந்த குமரன் என்கிற குமரவேல் கார் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி குமரவேல் தமது உறவினர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் பரதராமனை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பரதராமன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 4ம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், முதியவர் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இந்த கொலை வழக்கில் குமரவேல், தாய்மாமன் அருணகிரி, உறவினர்கள் பழனி, கல்பனா, மலர், சங்கீதா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்கில் குமரவேல், தாய்மாமன் அருணகிரி ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினர்கள் பழனி, கல்பனா, மலர், சங்கீதா உள்ளிட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.