
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தர்மயுத்த இணைப்பு விழாவிற்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில் ஒபிஎஸ்சின் படம், மற்றும் அவரை ஆதரவாளர்கள் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது. ஒபிஎஸ்க்கு எதிர்ப்பை காட்டியது மக்களா? அல்லது எதிரணியினரா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியில் சேரும் விழாவானது “தர்மயுத்த இணைப்பு விழா” என்ற பெயரில் தஞ்சை திலகர் திடலில் நேற்று நடைப்பெற்றது.
இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று தஞ்சை காந்திசாலை, புதுக்கோட்டை சாலை, மருத்துவகல்லூரி சாலை என நகரில் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர், தஞ்சை பழைய பேருந்து நிலையம், இர்வீன்பாலம், காந்திசாலை, இரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் முன்பு, மேரீஸ்கார்னர், ராமநாதன் ரவுண்டானா, புதுக்கோட்டை ரோடு, வல்லம் நம்பர்-1 சாலை, புதிய பேருந்து நிலையம், மேலவஸ்தாசாவடி, தொம்பன்குடிசை ஆகிய பகுதிகளில் சாலையோரம் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை கிழித்து எறிந்தனர்.
சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் அந்த பேனரை வைத்திருந்தவர்களின் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் கிழிக்கப்படவில்லை. ஓரிரு இடங்களில் கொடிகளும் கிழிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை இரயில்வே கீழ்பாலத்தில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன், பி.எச்.பாண்டியன் ஆகியோரை வரவேற்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில் மர்மநபர்கள் தாரை ஊற்றி எழுத்துக்களை அழித்துள்ளனர்.
வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்ட விவரம் நேற்றுகாலை ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தஞ்சை இரயிலடியில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேனரை கிழித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். விழா மேடை, பேனருக்கு காவல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்செல்வனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், “பேனரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டாட்சியரிடம் அனுமதிப் பெற்றுதான் பேனர் வைக்க வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல் பேனர் வைத்துள்ளர்கள். பிரச்சனை இல்லை என்றால் எங்களுக்கும் எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், இப்போது பிரச்சனை வந்துவிட்டது. அதனால் அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும்” என்றார்.
நாங்கள் எந்த பிரச்சனையும் இன்றி பேனர் வைத்து கொள்ளுவதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர்.