
சேலம்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக விவசாயிகளைப் போன்று, நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும் என்று சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் தெரிவித்தார்.
ஜவுளி தொழிலுக்கு இதுவரை இந்தியாவில் வரி விதிக்கப்பட்டது கிடையாது. ஆனால், வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்குவர இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பில், ஜவுளி தொழிலுக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பிற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் மூன்று நாள்களுக்கு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜவுளி மொத்த வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகரில் அருணாசல ஆசாரி தெரு, டி.பி.சி.லைன், கணக்கர் தெரு, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, கருங்கல்பட்டி, குகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஜவுளி மொத்த விற்பனை கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பு நாளை (வியாழக்கிழமை) வரை நீடிக்கிறது.
இதுகுறித்து சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறியது:
“ஏற்கனவே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளி தொழில் மிகவும் நசுங்கி உள்ளது. தற்போது மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜவுளி தொழிலை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
குடிசை தொழிலாகத்தான் நெசவுத் தொழில் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு 5 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வரி விதிப்பினால் நெசவாளர்கள் தங்களது தொழிலை விட்டுவிட்டு மாற்று வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக நெசவாளர்கள் தறிகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்படும். விவசாயிகளை போன்று, நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும்.
இந்த மூன்று நாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக தினமும் ரூ.10 கோடி வீதம் 3 நாட்களும் ரூ.30 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, இந்த வரிவிதிப்பை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், போராட்டம் தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.