
சேலம்
ஆட்சி கவிழ்வதும், ஆட்சியை காப்பாற்றி கொள்வதும் அதிமுக அம்மா அணியினர் கையில்தான் உள்ளது என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த செம்மலை சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், “தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்களை நீக்கம் செய்வதும், கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள இயக்குனர்களை நீக்கம் செய்வதும், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை பணிமாற்றம் மற்றும் நீக்கம் செய்வது போன்ற செயல்களில் அதிமுக அம்மா அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மக்கள் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண முயன்றால், அதற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு எந்த தீர்வும் காணக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து தடை ஏற்படுத்தி உள்ளனர். எங்களை தீண்டதகாதவர்களாக கருதுகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் அதிமுக அம்மா அணியினர் இரு அணிகளும் இணையும் என்று வெளியில் கூறிக்கொண்டு, இணைப்பதற்கு உண்டான எந்த செயலையும் செய்யாமல் நாடகம் ஆடுவதை ஓ.பன்னீர்செல்வம் தெளிவாக தெரிந்து கொண்டு இணைப்பு என்ற ‘கமாவிற்கு’ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இணைப்பு குழுவையும் கலைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி என்பது இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் வெற்றிடமாகவே இருக்கிறது. முறையாக அனைத்து பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்படுபவரே பொதுச் செயலாளராக முடியும். எனவே, வி.கே.சசிகலா பொதுச் செயலாளர் பதவியில் இல்லை.
அதிமுக அம்மா அணியை பொறுத்தவரை சொல்வது ஒன்றாகவும், நடந்து கொள்வது ஒன்றாகவும் உள்ளது. அவர்களிடம் தெளிவு இல்லை. பலர் தலைமைக்கு கட்டுப்படாதவர்களாகவும், இதில் அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படாமலும் இருக்கிறார்கள்.
மேலும், அமைச்சர் - நிர்வாகிகள் இடையே மோதல் போக்கும் காணப்படுகிறது. அதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் மாறி மாறி கொடுத்த பேட்டியே சாட்சி ஆகும். ஆட்சி கவிழ்வதும், ஆட்சியை காப்பாற்றி கொள்வதும் அதிமுக அம்மா அணியினர் கையில்தான் உள்ளது.
அதிமுக மூன்று அணிகளாகவே இருந்தாலும், ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுப்பதால் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமையும்” என்று அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது எஸ்.சி.வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.