
OPS Met CM Stalin For The Second Time Today: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், இன்று காலை பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், பாஜகவை விட்டு விலகிய கையோடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.
ஒரே நாளில் 2வது முறையாக ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்
ஏற்கெனவே இன்று காலை நடைபயிற்சியின்போது முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இன்று 2வது முறையாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சென்று முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்கே சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு?
பாஜகவில் இருந்து விலகியுடன் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஓபிஎஸ் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பாரா? இல்லை திமுகவில் சேர்ந்து புதிய பொறுப்புகளை பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஆகையால் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காகவே ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அரசியல் உள்ளது?
இந்த சந்திப்பில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை. இது மரியாதனை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று காலை நடைபயிற்சியின்போது ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், அப்போதே உடல்நலம் குறித்து விசாரித்து இருப்பார். ஆகையால் மீண்டும் வீடு தேடி சென்று ஓபிஎஸ் முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே இந்த சந்திப்பில் முழுக்க, முழுக்க அரசியல் உள்ளது அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பாஜகவுக்கு, அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் ஓபிஎஸ்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பிடித்தும் பாஜக, ஓபிஎஸ்க்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தும் அவர்களை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்டு பாஜக தன்னை மதிக்காததால் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக விலகினார். இந்நிலையில், தன்னுடைய பலத்தை நிரூபிக்கவும், பாஜகவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் ஓபிஎஸ், ஸ்டாலினை சந்தித்துள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல் தன்னை கட்சியில் சேர்க்க மறுக்கும் இபிஎஸ்க்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் ஓபிஎஸ் முதல்வரை சந்தித்துள்ளார் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.