
தமிழகத்தில் அதிகார மாற்றம் , அதிரடி அரசியல் ஓடும் சூழலில் முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக தனது தலைவி ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்தார் , இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓபிஎஸ் அவரது மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்றார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முதல்வராக நெடு நாட்களுக்கு பிறகு காமராஜர் போன்று எளியவராக , காட்சிக்கு எளிய முதல்வராக , செயல்வீரராக ஓபிஎஸ் செயல்பட்டது அனைவரையும் அவர் மீது அபிமானம் கொள்ள வைத்தது.
இதையடுத்து ஓபிஎஸ் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகும் படி பணிக்கப்பட்டார். தனது பதவிக்கு தானே தன் வாயால் சசிகலாவை அழைக்கும் படி நிர்பந்தமான நிலை ஏற்பட்டது.
அந்த கணத்தில் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ஓபிஎஸ் முகத்தில் ஒரு நெருக்கடியை , இறுக்கத்தை காண முடிந்தது. நாடே சசிகலா வருவதை எதிர்த்தது. ஓபிஎஸ் மாற்றத்தை ஏற்றுகொள்ள மறுத்தனர்.
ஓபிஎஸ் தனது இறுக்கமான முகத்துடன் வீட்டுக்கு சென்றவர் அங்கேயே முடங்கினார். இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் திடீரென தனது தலைவி ஜெயலலிதாவின் கல்லறைக்கு வந்தார் ஓபிஎஸ்.
எல்லோரும் அவர் மரியாதை செய்கிறார் என்று நினைத்தனர்.
குனித்து தனது மறைந்த தலைவியை வணங்கிய ஓபிஎஸ் அங்கேயே அப்படியே தியானத்தில் அமர்ந்தார். அப்படியே அமர்ந்தவர் இதுவரை எழுந்திரிக்கவில்லை. 20 நிமிடங்களுக்கு மேலான தியானத்தால் தமிழகமே அரண்டு போனது.
மவுன அஞ்சலியை அனைத்து சானல்களும் நேரடியாக் ஒளிபரப்பின. தனது தலைவியின் ஆன்மாவுடன் ஓபிஎஸ் உரையாடுகிறாரா, தற்போதைய நிலையில் தனது குழப்பமான மன நிலைக்காக அவர் தலைவியிடம் ஆலோசனை கேட்கிறாரா? என்றெல்லாம் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது.
ஓபிஎஸ்சின் மவுன அஞ்சலி தமிழகம் முழுதும் கோடானுகோடி மக்களை பேசவைத்து வருகிறது. அவர் மவுனம் கலைந்து பேசினால் உண்மை வெளியாகும்.