தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ..? - சென்னை , மதுரை , திருச்சி அலர்ட்..!

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 6:16 PM IST
Highlights

தமிழகத்தில் ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய, மரபியல் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
 

தமிழகத்தில் ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்களில் இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய, மரபியல் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இன்று மதுரை விமான நிலையத்தில் துபாய், மற்றும் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகளிடம் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் துபாயிலிருந்து வந்த 128 பயணிகளும், இலங்கையிலிருந்து வந்த 151 பேரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் வந்த அவரது மனைவி, மகனுக்கும் பரிசோதனை செய்ததில், இருவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான அந்த நபர், ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவரது சளி, இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மரப்பியல் பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த அந்த பயணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி, மகன் , பிற பயணிகள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.  இதனிடையே அவர்கள்15 நாள் தனிமையில் இருக்க, சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கண்காணிக்க, வருவாய், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுவரை வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை விமானநிலையங்களில் வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவில் ஒமைக்ரான் வகை  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுர் வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதுடைய நபருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றிதழுடன் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் பெங்களுரில் வெளிநாட்டிற்கு செல்லாத நிலையில், 46 வயதாக மருத்துவர் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து நேற்று, ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயதுடைய நபர் ஒருவருக்கும், அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு திரும்பிய 33 வயதான நபருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

click me!