வடகிழக்கு பருவமழை காலமான தற்போது, தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களில் ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் செவ்வாய்க்கிழமையான 7ம் தேதியில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கொடுமுடியில் தலா 9 செ.மீ மழையும், கோவையில் 7 செ.மீ மழையும், எட்டயபுரத்தில் 6 செ.மீ மழையும், நாங்குநேரி, மோகனுார், வெம்பக்கோட்டை, சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும் பெய்து இருக்கிறது என்று கூறி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலை கொள்ளும். இதன் காரணமாக இன்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதைஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.