
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஒரே நாளில் தொடர்ந்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ரூ 1 இலட்சத்து 8500 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவர் எஸ்.கே.எம்.காசியார் (55). முன்னாள் பேரூராட்சி உறுப்பினரான இவர் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 55 ஆயிரம் பணம் திருடி போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கடை எதிரே மளிகைக் கடை வைத்துள்ள இக்பால் என்பவரது கடையிலும் முன்பக்க பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ 3500 திருடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சேதுசாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாகுல்ஹமீது என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் தலையில் பனிகுல்லா, கையுறை அணிந்த மர்மநபர் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.
கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி செல்லும் பகுதியில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"பேராவூரணி காவல் நிலையத்தில் குற்றதடுப்பு காவலர்கள் இல்லாதது, போதிய காவலர்கள் இல்லாதது, இரவில் ரோந்து பணிகள் இல்லாதது போன்றவற்றால் தான் இங்கு திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
எனவே, மாவட்ட காவல்துறை போதிய காவலர்களை நியமிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.