
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மணல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்பட 700 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கட்டிடப் பொறியாளர் சங்கம், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு கட்டிடப் பொறியாளர் ஜீவானந்தம் தலைமைத் தாங்கினார். கட்டிடப் பொறியாளர்கள், கட்டுமான தொழிளாலர்கள், லாரி, மாட்டுவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"மணல் பிரச்சனைக்கு தீர்வு காண எம் சாண்ட் மாற்று மணல் உற்பத்தியை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம் சாண்ட்க்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும்.
எம்சாண்ட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்.
இறக்குமதி மணல், உள்நாட்டு மணலைவிட குறைவாக உள்ளதால், தாமதமின்றி தமிழக அரசு மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் உட்கார்ந்து பாடை கட்டி போராடினர்
தொடர்ந்து, புதுக்கோட்டை நகர காவலாளர்கள் கலைந்துபோக சொல்லியும், மறியலை கைவிட மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்ததால் , கட்டுமான பெண் தொழிலாளர்கள் உள்பட 700 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்தால் புதிய பேருந்துநிலையம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.