
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஆழ்ந்த இரங்கலையும், கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
இன்று செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "கரூரில் நடந்த சம்பவம் அனைத்து தமிழக மக்களின் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஆகும். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனுடைய திருவடிகளில் இளைப்பாற நான் பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துயரச் சம்பவம் குறித்து மக்களின் மனங்களில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ள நிலையில், மக்களின் கருத்தின்படி, இந்த துயரச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்," என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.