
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து மத்திய அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசிடம் அறிக்கை கோரியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் நேற்று மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்கு மேல் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலின்போது, 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோர விபத்து குறித்து, தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உடனடியாக அறிக்கை கேட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசிடம் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் தற்போது அறிக்கை கேட்டுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அறிக்கை கோரியுள்ள நிலையில், மாநில ஆளுநரும் அறிக்கை கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன், தமிழக அரசு மற்றும் த.வெ.க. சார்பில் நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.