
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர, கணித பாடத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஏஐசிடிஇ-ன் புதிய விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேண்டுமானால் பொருந்தும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில், கணித பாடத்தை படித்திருந்தால் மட்டும் பொறியியல் படிப்பில் சேர முடியும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி 4 ஆண்டுகள் பட்டப்படிப்புகள், ஓராண்டு படிப்புகள் ஆகியவை தமிழ்நாட்டில் இருக்காது. இங்கு 10 + 2 +2 என்ற பள்ளி, கல்லூரி அமைப்பு முறையில் மாநில அரசு உறுதியாக உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையே அமலில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.
12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்து படித்த மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், சில பொறியியல் படிப்புகளில் சேர கணிதம் தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. குறிப்பாக வேளாண் பொறியியல் , ஜவுளி வேதியியல், கட்டடக் கலை, ஃபேஷன் டெக்னாலஜி, பேக்கேஜிங் டெக்னாலஜி போன்ற பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஒருபுறம் இந்த அறிவிப்பு பல மாணவர்களுக்கு இன்ஜினியரிங் சேருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று மறுபுறம் இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் கணிதம் அடிப்படை என்றும், கணிதம் இல்லாமல் பொறியியல் படிப்பு படிப்பது திறனற்ற பொறியாளர்களை உருவாக்கும் என்றும் கல்வியாளர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத தமிழக எம்.பிக்கள்.. இத்தனை கோடி வீணா? அதிர்ச்சி தகவல்..