தமிழக அரசு மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை வழங்க தயாராகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு ரேஷன் கார்டுகள் உடனடியாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்படி, இந்த திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நேற்றுகூட, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது, விதிமுறைகள் வகுப்பது, உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதிகளை இறுதி செய்வது, பெண்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், உரிமைத்தொகையை மாதந்தோறும் மகளிருக்கு வழங்கும் முறை உள்ளிட்ட திட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது. இந்த திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வர தாமதம் ஏற்பட்டாலும், தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது போன்று அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், திமுக பொறுப்பேற்றதும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. திமுக ஆட்சிக்கு வந்த மே மதம் முதல் ஜூலை வரை புதிதாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
ஏற்கனவே, சுமார் 2.07 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டும் வந்தன.
அதேசமயம், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை எனவும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. யார் யாரெல்லாம் ரூ.1000 பெற தகுதியானவர்கள், யாருக்கெல்லாம் உரிமை தொகை கொடுப்பது போன்ற பட்டியல் தயாராகி வருவதாக தெரிகிறது. திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்கள் கண்டிப்பாக பயணடைவர் என்றாலும், குறிப்பிட்ட சிலர் பயணடைய முடியாது என தெரிகிறது.
தமிழ்நாடு டிஜிபி ரேஸில் சஞ்சய் அரோரா? புதிய திருப்பம்!
இந்த பின்னணியில், புதிய ரேஷன் கார்டுகள், திருத்தம் செய்ய விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ரகசிய சர்வே ஒன்றை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கில் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது தெரியவந்துள்ளது. ஒரே வீட்டில் வசிப்பவர்கள், தாய் தந்தை பெயரிலோ, மகன் மருமகள் பெயரிலோ புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிலர் ரூ.1000 உரிமை தொகையை வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
ஆனால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருக்கவும் கூடாது என்பதால், புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்களை தீவிர ஆய்வு செய்து அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் கொடுக்க உணவு வழங்கல் துறைக்கு வாய்மொழி உத்தரவு பறந்திருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி, ஒருவர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பத்துடன் இணைத்து இருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று ஒன்றுக்கு இரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களாம். மேலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று வீட்டை ஆய்வு செய்து, சமயலறை எத்தனை உள்ளது, கேஸ் சிலிண்டர் யார் யார் பெயரில் எத்தனை உள்ளது, ஒரு அடுப்பா அல்லது இரண்டு அடுப்பா என்பது குறித்தெல்லாம் விசாரித்து விட்டே ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளதாக கூறுகிறார்கள். இதனால், புதிய ரேஷன் கார்டுகள் கிடைப்பதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், நிதித்துறை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டதும், உரிமை தொகை வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு இன்னும் 2 மாதம் காலமே உள்ளதால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், தகுதி வாய்ந்த மகளிர் அடையாளம் காணப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.