12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி அடையாத மாணவர்கள் நாளை முதல் துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களில், 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் உடைய மாவட்டங்கள் திருவண்ணாமலை.90.47 சதவீதத்துடன், நாகப்பட்டினம் 91.19 சதவீதமும், திருவள்ளூர் 91.32 சதவீதமும் பெற்று கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அடிப்படையில், திருப்பூர் 97.45%, பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 97.42 சதவிகித தேர்ச்சியும், 97.24% சதவீத த்துடன் அரியலூர் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த முறையும் மாணவர்களை காட்டிலும் 4.07 சதவிகிதம் மாணவியர் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
மறு தேர்வு எப்போது.?
இந்தநிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி அடையாத மாணவர்களும் நாளை முதல் துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், உடனடி தேர்வுகள் குறித்த தேதிக்கான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9ஆம் தேதி வழங்கப்படும், அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.