ncrb:முதியோர் கொலையில் தமிழகம் முதலிடம் ! வயதானவர்கள் வாழ தகுதியில்லாதவர்களா? என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

By Pothy RajFirst Published Sep 6, 2022, 3:03 PM IST
Highlights

கடந்த 2021ம் ஆண்டில் முதியோர்கள் அதிகமாகக் கொலை செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய குற்றஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவிக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டில் முதியோர்கள் அதிகமாகக் கொலை செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய குற்றஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவிக்கிறது.

2021ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1,686 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 1,741 பேர் கொல்லப்பட்டனர். 

இதில் 11.3 சதவீதம் முதியோர் கொலையாகும். அதாவது 202 பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள், 191 கொலைவழக்குகள் முதியோர் தொடர்புடையது என்பது அதிர்ச்சிக்குரியதாகும். 2வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. அங்கு 2,142 கொலை வழக்குகள் பதிவாகின, அதில் 181 பேர் மூத்த குடிமக்கள்.

முதியோர் கொலை செய்யப்படுவது கடந்த 2019ம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொலை எண்ணிக்கை குறைந்தபோதிலும் கொலை செய்யப்படுவோரில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டில் 1745 கொலை வழக்குகள் பதிவாகின, இதில் கொல்லப்பட்டதில் 173 பேர் முதியோர், 2021ல் 191 ஆக அதிகரித்தது.

2021ம் ஆண்டில்தான் முதன்முதலாக தமிழகம் முதியோர் கொலையில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இதற்கு முன் இவ்வளவு மோசமாக தமிழகத்தில் முதியோருக்கான பாதுகாப்பு, வாழும் உரிமை மோசமானதாக இல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பதபதக்க வைக்கும் வகையில் முதியோர் கொலைகள் பல நடந்துள்ளன.

2022 ஜூலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முதியோர் ஜோடி கொல்லப்பட்டனர், திருப்பூரில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

முதியோர் அதிகம் வாழும் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. 2021ம் ஆண்டு முதியோர் குறித்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் முதியோர் 13.6% உள்ளனர். தேசிய அளவில் கேரளாவுக்கு அடுத்தார்போல் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் 16.5% பேர் முதியோர் அதாவது 60வயதைக் கடந்தவர்கள்

குற்றவீதத்தைப் பொறுத்தவரையிலும் முதியோர் கொலையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கேரள மாநிலத்தில் 337 பேர் அதாவது 17.2% முதியோர் கொல்லப்பட்டனர். இது தமிழகத்தின் சதவீதமான 11.3விட அதிகம்தான். 

ஆனால் க்ரைம்ரேட் எனச் சொல்லப்படும் குற்றவீதம் கேரளாவில் 0.99% மட்டும்தான் இது தமிழகத்தில் 1.83% ஆகஇருக்கிறது. 

முதியோரும், குழந்தைகளும் ஒன்றுதான். இருவருமே நிராயுதபானிகள். தங்களை தாக்க வருவோரை எதிர்த்து தாக்க குழந்தைகளுக்குத் தெரியாது, முதியோருக்கு தங்களைத் காத்துக்கொள்ளக்கூடிய உடலில் வலுவில்லாமல் இருப்பார்கள். கொள்ளையடிப்பவர்களுக்கு முதியோர் இருக்கும் வீடுகள் என்றால் அவர்கள் வேலை சுலபகமாக முடிந்துவிடும். முதியோருக்கு பாதுாப்பின்மை அதிகரித்துவருவதால்தான் அவர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரி்த்து வருகிறது. 

முதியோருடன் காவல்துறையினர் நட்புறவோடு இருப்பது அவசியம். 2ம்நிலை மற்றும் 3ம்நிலை நகரங்களில் முதியோருக்கு விழிப்புணர்வு வகுப்புகளை போலீஸார் நடத்த வேண்டும். 

click me!