போலீஸ் விசாரணையில் தான் துன்புறுத்தப்படவில்லை என நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை மொத்தம் 7 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார். அவரை மே 31ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வி.எல் சந்தோஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக, திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் 7 நாட்கள் விசாரிக்கஎடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரினர். ஆனால், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்து விட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, “சிறையில் எனக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் நான் துன்புறுத்தப்படவில்லை. கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது. அங்கு எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும், அனைவருக்கும் இருக்கக்கூடிய சிறை போலவே வழங்க வேண்டும்” என நீதிமன்றத்தில் ஆஜரான யூடியூபர் சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியின.
முன்னதாக, திருச்சியில் போலீஸ் காவலின் போது, “பெண் போலீசார் குறித்து அவதூறு பேசி என்னை யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜர்னலிசம். எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன். பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தவறுதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன்.” என சவுக்கு சங்கர் கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், சவுக்கு சங்கரை கைது செய்து தேனியில் இருந்து கோவை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, கையில் கட்டுடன் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, போலீசாரால் தான் தாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார் என்பது நினைவுகூரத்தக்கது.