கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Apr 2, 2024, 12:54 PM IST
Highlights

கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்

கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.

ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேதலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என பாஜகவையும், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுக்கவில்லை. நாட்டின் இறையான்மை சம்பந்தப்பட்ட விஷயத்தை எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்றார்.

கச்சத்தீவு தொடர்பாக திமுக, காங்கிரஸ் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், “கச்சத்தீவை தொல்லை என நேரு குறிப்பிட்டார்; கச்சத்தீவை வெறும் கல் தீவு என இந்திரா காந்தி குறிப்பிட்டார். கச்சத்தீவு குறித்து நேரு, இந்திரா காந்தி பேசியதற்கு கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் தடை விதித்த போது திமுக ஏன் பேசவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார். தேர்தல் பத்திரங்கள் குறித்த கேள்விக்கு, தேர்தல் பத்திரம் மூலம் 90 சதவீதம் நிதி பெற்றது திமுகதான் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்: பாஜக மீது டெல்லி அமைச்சர் அதிஷி பகீர் குற்றச்சாட்டு!

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து தமிழகத்தில் பேசுபொருளானது. தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிந்து விட்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூட விமர்சித்திருந்தார். அதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், என்னை கட்சி முடிவெடுத்து என்னை பணித்தால் நான் போட்டியிடுவேன் என்றார். தோல்வி பயம் இருந்தால் நாங்கள் ஏன் இத்தனை வேட்பாளர்களை நிறுத்துகிறோம் எனவும், பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வெள்ள  பாதிப்புக்கு மத்திய அரசு போதுமான நிதியுதவி அளிக்கவில்லை என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழ்நாட்டுக்கு 900 கோடி நிதியை ஒதுக்கினோம். சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 கோடி வழங்கியுள்ளோம். இந்த நிதியை  என்ன செய்தார்கள்? தமிழக அரசு கணக்கு சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

click me!