அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான வெப்பநிலை முதல் குறைவான வெப்பநிலையே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்தால், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டால் வெயில் எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர்-107, ஈரோடு-104, சேலம்-102, கரூர் பரமத்தி-102, நாமக்கல்லில்-101, மதுரை விமான நிலையம், வேலூர், தருமபுரி 101, பாளையங்கோட்டை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான வெப்பநிலை முதல் குறைவான வெப்பநிலையே இருக்கும். கிழக்கு காற்று காரணமாக ஏற்படும் வெப்பநிலை மாற்றத்திற்கு நன்றி..
Next one week, Chennai to see normal to below normal temperatures. Thanks to easterlies.
Even in Kongu / interior Tamil Nadu temp will see drop in temp and those places which was recording 40-41 C will be recording 37/39 C. Chance of heatwave in TN till election is less. pic.twitter.com/oHVMtn3tPU
கொங்கு பகுதிகள், உள் தமிழ்நாட்டு பகுதிகளிலும் வெப்பநிலை குறையும். 40-41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான இடங்களில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். எனவே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு..” என்று பதிவிட்டுள்ளார்.