போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை - அமைச்சர் தகவல்!

By Manikanda PrabuFirst Published Jan 5, 2024, 6:26 PM IST
Highlights

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்

போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வருகிற 9ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்தது. திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினால் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்படும். போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும்  தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மாலத்தீவுக்கு மாற்றாகும் லட்சத்தீவு? பிரதமர் மோடி வருகைக்கு பிறகு கூகுள் தேடலில் முதலிடம்!

இது தமிழக அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களை தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அதன்படி, சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க 1 நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறையிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். அதன்பிறகு முடிவெடுக்கப்படும். நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்றார்.

இதனிடையே, அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

click me!