
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜயுடன், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை சார்பில் ரகசியக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 48 மணி நேரமாக, பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் சிலர் நடிகர் விஜயுடன் நெருங்கிப் பேசி வருவதாகத் தெரிகிறது. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரும் விரைவில் விஜயைச் சந்தித்து ஆலோசனை நடத்த களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கரூர் வழக்கு: விஜயின் பதற்றம் கரூர் வேலுச்சாமிபுரம் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, ஆளும் தி.மு.க.வால் தீவிரமாகப் பின்தொடரப்பட்டு வருவதால், தவெக தலைவர் விஜய் நெருக்கடியிலும் பதற்றத்துடனும் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்த வழக்கில் விஜய்க்கு எதிராகவே தீர்ப்பு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
பிரசாரத்துக்கு தாமதமாக வந்தது, வரும்போதே அதிக கூட்டத்தைக் கூட்டிவந்தது, கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனத்தை 50 மீட்டர் முன்பே நிறுத்தச் சொன்னதைக் கேட்காதது, மின்மாற்றியிரல் ஏறிய தொண்டர்களைக் கண்டிக்காதது என அனைத்தும் விஜய்க்கு எதிராக உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான வீடியோ ஆதாரங்களும் உள்ளன.
இந்தச் சூழலில்தான், விஜய் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் சுமார் 3 மணிநேரம் தீவிர ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, "இந்த வழககில் தி.மு.க.வை என்னால் தடுக்க முடியாது. தி.மு.க. ஐ.டி. விங் எங்கள் கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள் தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்றுத் தர வேண்டும்" என்று விஜய் கேட்டுக்கொண்டாராம்.
ஏற்கெனவே வருமான வரித்துறை வழக்கு மூலம் விஜயை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயலும் டெல்லி தலைமை கரூர் சம்பவத்தை இன்னொரு வாய்ப்பாகக் கருதி, தீவிரமாக வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பா.ஜ.க. வகுத்திருக்கும் வியூகத்தில் விஜய்க்கு 50-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறார்களாம். தற்போது பாஜகவுடன் அதிமுகவும் இருக்கும் நிலையில், தவெகவையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
“நீங்க எங்க கூட்டணிக்கு வாங்க. கேஸை எல்லாம் நாங்கள் பார்த்துகிறோம்" என்று டெல்லி பாஜக தரப்பில் விஜய்க்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த வாக்குறுதியின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாஜகவின் முயற்சியை அறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை நழுவ விடுகிறது என அதிருப்தி அடைந்துள்ளனர். கரூர் துயரத்திற்குப் பிறகு காங்கிரஸ் தங்களுக்கு உறுதியான ஆதரவு கொடுக்கும் என விஜய் எதிர்பார்த்தார் எனவும் ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு மாறாக பேசிவருகிறார்கள் என்று காங். அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.
அதிலும், எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, விஜய்க்கு ஆளுமை இருக்கிறதா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றெல்லாம் கிண்டலாகப் பேசியுள்ளார். இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் கட்சியை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த விஜய் டெல்லியின் ஆதரவை நாடியுள்ளார் என காங். அதிருப்தி தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.