
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். மக்களுக்கும் நாட்டிற்கும் பெரிய சேவையை செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ஆளுநர் ரவியின் கருத்துகளைப் பகிர்ந்துள்ளது.
“இந்த விஜயதசமியன்று, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், தனிப்பட்ட குடிமக்களின் பண்பு உருவாக்கத்தின் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்பும் தனது தடையற்ற பயணத்தில் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை ஆண்டுகளிலும், ஆர்.எஸ்.எஸ். மக்களுக்கும் நாட்டிற்கும் பெரிய சேவையை செய்துள்ளது.” என ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
“நிலநடுக்கங்கள், பேரழிவு தரும் வெள்ளங்கள், புயல்கள், நிலச்சரிவுகள் அல்லது தொற்றுநோய்கள் போன்ற எந்தவொரு இயற்கை சீற்றத்தால் நாடோ அதன் பகுதிகளோ பாதிக்கப்பட்டபோதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முதல் ஆளாக நின்றவர்களில் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களும் அடங்குவர்." எனவும் கூறியுள்ளார்.
"குடிமக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்குவதில் அதன் பங்களிப்புக்கு நிகரில்லை” என்று ஆளுநர் ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
“சுதந்திரம் அடைந்த பிறகு பத்தாண்டுகளாக அரசுகள் சென்றடைய முடியாத, சர்வதேச எல்லைகளில் உள்ள தொலைதூரப் பகுதிகளிலும், வடகிழக்கின் மூலை முடுக்குகளிலும், அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் பழங்குடியின கிராமங்களிலும் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதற்காக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளனர்" எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.