
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனே சென்னை கிளம்பி சென்றது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. அதன்பிறகு 3 நாள் கழித்து கரூர் சம்பவம் குறித்து விஜய் பேசினார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசிய விஜய், '''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது. எனது மனம் முழுவதும் வலி மட்டும் தான்.
பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு சென்றோம். ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது'' என்றார். மேலும் பழிவாங்குவது என்றால் என்னை பழிவாங்குங்கள். தொண்டர்கள் மீது கைவைக்காதீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாஜக தன்பக்கம் நிற்கும் தைரியத்தில் விஜய் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதயத்தில் வலியோ, காயமோ இல்லை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''விஜய் வெளியிடட் வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை. விஜய்க்கு இதயத்தில் எந்த காயமோ, வலியோ இல்லை என்பது அந்த வீடியோ மூலம் தெரியவருகிறது. விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. இது கஷ்டமாக இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை இல்லை.'' என்று கூறியுள்ளார்.
திமுக, பாஜக, காங்கிரசுக்கு கேள்வி
தொடர்ந்து பேசிய சீமான், ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு காரணமான ஸ்டாலின் அங்கு செல்லவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமான விஜய் இங்கு வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உண்மை கண்டறியும் குழு அமைக்காத பாஜக, கரூர் சம்பவத்துக்கு குழுவை உடனே அனுப்புகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து பேசாத காங்கிரஸ், உடனே கரூர் விரைந்து வருகிறது. ஆந்திர அரசால் 29 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது மத்திய பாஜக் அரசு என யாரும் வாய் திறக்கவில்லை'' என்று வேதனை தெரிவித்தார்.