கவிஞர் இனியவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகளிர் ஆணையம், அவரது பேச்சுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கவிஞர் இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் இனியவன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாமலே அமைச்சராக இருந்துகொண்டு தமிழக எம்.பி.க்களிடம் கேள்வி எழுப்புவது குறித்து சாடியிருந்தார். நிர்மலா சீதாராமனைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
அவரது பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலானது. இனியவனின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இனியவன் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர்.
இனியவனின் தரக்குறைவான பேச்சு பற்றி தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்தப் புகார்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கவிஞர் இனியவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆணையம், அவரது பேச்சுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இனியவனின் பேச்சைக் கண்டித்து கடந்த புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், "பாஜகவின் பெண் தலைவர்களை இழிவுபடுத்தும் கருத்துக்களைக் கூறி, பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே மேடையில் இடம் கொடுப்பதை திமுக வழக்கமாக வைத்துள்ளது. இந்த மோசமான அணுகுமுறை இந்த அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. பாஜக தொண்டர்களை அவர்களின் சமூக ஊடக பதிவுகளுக்காக கைது செய்ய எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஆனால் இது போன்ற அசிங்கங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், "நிர்மலா சீதாராமன் குறித்த கருத்துகளை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது, மேலும் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
டிராபிக் போலீசை காருடன் தரதரவென்று இழுத்துச் சென்ற போதை ஆசாமி! வைரல் வீடியோ!