ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை! கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது! நயினார் நாகேந்திரன்!

Published : Jun 25, 2025, 01:05 PM IST
Nainar Nagendran

சுருக்கம்

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆ.ராசாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு மக்கள் 2026-ல் பதிலடி கொடுப்பார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசுகையில்:- சமீபத்தில் மதுரை வந்திருந்த அமித் ஷா டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்துவிட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு என கூறியிருந்தார். 

ஆ.ராசாவுக்கு கண்டனம்

முட்டாள்.. முட்டாள்.. டெல்லியில் நீங்கள் பார்த்த அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் ஒரு தனிப்பட்ட தலைவன்; ஒரு அரசியல் கட்சி அவ்வளவுதான். ஹரியானாவில் நீ தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் நீ தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. அவருக்குப் பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்கிற திராவிட தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவத்தை வீழ்த்துவதற்குதான் துடிக்கிறீர்கள் என்று காட்டமாகப் பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா பற்றி முட்டாள் என ஆ.ராசா விமர்சித்ததற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாவடக்கம் தேவை

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி ஆ. ராசா அவர்கள், நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.

மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் நமது மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி

அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், “நாம் தான் நம்பர் 1 முதல்வர்” என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என நயினார் நாகேந்திரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!