
Indian Air Force pilot Shubhanshu Shukla travels to International Space Station இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவின் விண்ணவெளி பயணம் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏழு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. (தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை, ஆக்ஸிஜன் கசிவு) இந்த நிலையில் ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணத்திட்டம் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு விண்ணுக்கு புறப்பட்டது. இந்த விண்ணவெளி பயணத்தில் ஒரு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் பயணம் செய்கிறார்.
இஸ்ரோ, நாசா, மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியான இத்திட்டத்தில், சுபான்ஷு சுக்லா அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார். சுபான்ஷு சுக்லா அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் 14 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு நடத்தவுள்ளனர். இந்த விண்ணவெளி பயணத்தின் போது விண்வெளியில் பச்சைப்பயிறு, வெந்தயம் போன்ற விதைகளின் முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்தில் ஒட்டுமொத்தமாக 60 அறிவியல் பரிசோதனைகள் நடைபெறவுள்ளது. இதில் 7-ஐ சுக்லா நடத்தவுள்ளார்.
இந்த பயணம் ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக அமைகிறது. சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 2019-ல் இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில்கடந்த 2020-2021 காலகட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளார். இதனையடுத்து பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் மேம்பட்ட பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பிறந்த சுபான்ஷு சுக்லா ஒரு இந்திய விண்வெளி வீரரும், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாக பணியாற்றியுள்ளார். ஆக்ஸியம்-4 (Axiom-4) திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணிக்க உள்ள முதல் இந்தியராகவும், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியராகவும் பெருமையை சேர்த்துள்ளார். 2019 இல் இஸ்ரோவின் அழைப்பின் பேரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றார்.