உண்மைகள் அம்பலமாகிவிடும் பயமா முதல்வரே? ஸ்டாலினை சுற்றி வளைக்கும் 12 கேள்விகள்! நயினார் நாகேந்திரன்!

Published : Oct 01, 2025, 01:08 PM IST
Nainar Nagendran

சுருக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். அரசின் நிர்வாகத் தோல்வியே இத்துயரத்திற்குக் காரணம். ஒரு நபர் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தவெக விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?என முதல்வருக்கு 12 கேள்விகளை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நேற்று, நமது பாஜகவினால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுமையாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் முன்வைக்க விரும்புகிறேன்.

1. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?

2. விஜய் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?

3. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?

4. திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?

5. 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?

6. 10,000 பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசின் காவல்துறை, கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்?

7. விஜய் அவர்கள் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?

8. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது உறுதி. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்?

9. இவ்வளவு குறைபாடுகள் அரசுத் தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?

10. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன்?

11. விசாரணை நடைபெறும் நிலையில் அது குறித்து பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்? இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா? திறமைமிக்க அரசு அதிகாரிகளைத் திமுகவின் கைப்பாவைகளைப் போல பயன்படுத்துவது சரியா?

12. அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம். கோரிக்கையைப் பரீசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!