
தமிழகத்தில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஒப்புதல் கோரி சென்னை மெட்ரோ நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் குறைந்த மக்கள் தொகையை காரணம் காட்டி கோவை, மதுரை மெட்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. மதுரை, கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்'' என்று கூறியிருந்தார்.
இதேபோல் பல்வேறு தரப்பினரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மதுரை, கோவை மெட்ரோ தொடர்பாக தமிழக அரசு தவறான திட்ட அறிக்கை சமர்ப்பித்ததாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வதந்தியை பரப்பும் ஸ்டாலின்
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மெட்ரோ இரயில் குறித்து வதந்திகளைப் பரப்பி மீண்டும் மீண்டும் அரசியல் செய்யும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே. திடீரென கோவை மற்றும் மதுரை மெட்ரோ மீது அதீத அக்கறையைக் காட்டும் நீங்கள், முதலில் தங்களது திமுக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் (DPR) உள்ள கூறுகளை முழுவதுமாக படித்தறிந்தீர்களா?
2025-இன் உத்தேச மக்கள்தொகை குறிப்பிடவில்லை
1. கோவை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையில், ஏற்கனவே தற்போது இருக்கும் பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரோ இரயில் திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று காட்டப்பட்டுள்ளது.
2. திமுக அரசு அனுப்பிய DPR-இல் 14 ஆண்டுகளுக்கு முன்னருள்ள 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-இன் உத்தேச மக்கள்தொகை ஏன் குறிப்பிடப்படவில்லை?
பொதுமக்களின் சொத்துகள்
3. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட Comprehensive Mobility Plan-இல், மதுரையில் உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு BRTS (Bus Rapid Transit System)-ஏ போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4. இது போதாததற்கு, கோவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ள மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தினால், அதிக அளவில் பொதுமக்களின் சொத்துகள் இடிக்கப்பட நேரிடும். இந்த லட்சணத்தில் தான் தாங்கள் சமர்ப்பித்துள்ள திட்ட அறிக்கை உள்ளது.
நல்ல முதல்வருக்கு இதுதான் அழகு
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை. இனியாவது தங்களது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே! அது தான் ஒரு நல்ல முதல்வருக்கு அழகு மட்டுமல்ல, பொறுப்பும் கூட'' என்று கூறியுள்ளார்.