
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இயற்கை வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்குள்ள இடம்பெற்றுள்ள பொருட்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதன்பின்பு மந்திரியின் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.
இதனைத் தொடர்ந்து வேளாண் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். வேளாண் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''இயற்கை விவசாயம் எனது மனதுக்கு, இதயத்துக்கு நெருக்கமான ஒன்று. இந்த மாநாட்டுக்கு நான் வரவில்லை என்றால் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். நான் இந்த மாநாட்டுக்கு வந்தபோது பச்சை துண்டை வீசி விவசாயிகள் என்னை வரவேற்றனர். விவசாயிகளின் அளவு கடந்த அன்பால் பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ என்று எண்ணினேன்'' என்று தெரிவித்தார்.
பீகார் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், அதை வைத்து தமிழ்நாட்டிலும் பீகார் வெற்றி பெறும் என்பதை கூறும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். மோடி இப்படி கூறியதும் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து மாநாட்டில் இயற்கை வேளாண்மை குறித்து பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சிறு விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம். ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.
இயற்கை விவசாயம் நமது பாரம்பரியம்
இயற்கை விவசாயம் இந்தியாவின் பாரம்பரியம் ஆகும். இயற்கை விவசாயம் நமது உடல்நலத்தை பாதுகாக்கும். விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக தென்னிந்தியா உள்ளது. இயற்கை வேளாண்மையை பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்ந்த இயக்கமாக மாற்ற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.