எதிர்பாராத விதமாக நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (அக்டோபர் 10ஆம் தேதி) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கப்பலின் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் இந்தச் சோதனை ஓட்டத்தை நடத்தினர்.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் நாகை - காகேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அக்டோபர் 10ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
40ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பம் ஆக உள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கு வெறும் 3 மணிநேரத்தில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.