பாமர மக்கள் தான் இவங்க டார்கெட்.. விஸ்வரூபம் எடுத்த MyV3ads விவகாரம்.. கொங்கு மண்டலத்தில் தொடரும் மோசடிகள்..

By Raghupati R  |  First Published Jan 30, 2024, 11:06 AM IST

யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி செய்த MyV3ads விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.


கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கோவை தாலியூரைச் சேர்ந்தவர் ஆவார். யூடியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கு பதிவை கண்டித்து முதலீட்டாளர்களுக்கு, MYV3ADS நிறுவனத்தின் இயக்குநர் சக்தி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில், “நம்முடைய MYV3ADS நிறுவனம் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக சுமார் ஐம்பது இலட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட மக்களின் நன்மதிப்பை பெற்று சக்தி வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

பல இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் நம்முடைய நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களாகவும், கடந்த சில நாட்களாகவும் சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் திங்கட்கிழமை 29-01-2024 அன்று காலை 9 மணி அளவில் கோவை மாவட்ட ஆட்சியர் (Collector) அவர்களிடம் மனு கொடுக்க இருக்கிறது.

ஆகவே அனைத்து உறுப்பினர்களும் நம்முடைய நிறுவனத்தில் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் குடும்பம் குடும்பமாக தவறாமல் வர வேண்டும். ஏனோதானோ என்று இருக்காமல் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களுக்கு கீழ் பனிரெண்டு லெவலில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும். புதிய உறுப்பினர்களுக்கு தெரியாது.

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..

ஆகவே வருமானம் பெற்று வரும் அனைவரும் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் தவறாமல் வாருங்கள். கூட்டம் சேர்வதற்கு அல்ல. தவறான தகவல் இருக்க கூடாது என்பதற்கு. கூட்டம் பல லட்சத்தை தாண்டினால் நமக்கு வெற்றி. இதற்குப் பின்னால் இனிமேல் எவனாவது MyV3ads பெயரை தவறாக நினைத்தாலே கொலை நடுங்கும் அளவிற்கு கூட்டம் சேர வேண்டும். 

இயற்கையின் அருளும் இறைவன் அருளும் மக்கள் சக்தியும் உள்ள நம்முடைய MYV3ADS நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது. நன்றி வணக்கம். என குறிப்பிட்டிருந்தார். இதன் பேரில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து முதலீட்டாளர்கள் கூறும் போது, ”நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் மோசடி செய்யவில்லை. ஆனால் மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப்பார்க்கிறார்கள்.

இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக விளம்பரப்படுத்துபவர்கள் மேற்கண்ட ஸ்கீமில் சேருபவர்களுக்கு வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுப்பார்கள் என்ற எந்த ஒரு விபரமும் அவர்களது இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்காமல் பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே கெட்ட நோக்கத்தோடு செயல்படுவதாக தெரிகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுப்பது தவறு என்று தெரிந்தும் தருவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களோ, பொய் புகாரின் பேரில், நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுவாகவே கொங்கு மண்டலம் எப்போதும் மோசடிக்கு இரையாகி வருகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் லில்லி புட் மோசடி, ரைஸ் புல்லிங் மோசடி, ஈமு கோழி மோசடி போல இதுவும் மிகப்பெரிய மோசடி ஆகும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா! ரூ.4800 மதிப்புள்ள OTT இலவசம்! 10 ஆயிரம் கூட கிடையாது இந்த ஸ்மார்ட்போன்!

click me!