அரசு பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள்; புத்தகங்களுக்கு தீவைத்துவிட்டு, கேண்டீனில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை...

First Published Jul 3, 2018, 12:08 PM IST
Highlights
Mystery people enter into government school fired textbooks and theft Rs.20 thousands


கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் அரசு பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் புத்தகங்களுக்கு தீவைத்துவிட்டு, கேண்டீனில் இருந்து ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் திருவிதாங்கோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் மாணவ – மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகளை வைப்பதற்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் பீரோக்கள் உள்ளன.

இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக் கூடத்தை திறந்தனர். பின்னர் ஒவ்வொரு வகுப்பறைகளையும் ஊழியர்கள் திறந்தனர்.

அப்போது, மேல்நிலைப் பள்ளியில் 5–ஆம் வகுப்பு அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது வகுப்பறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மாணவ – மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. 

யாரோ மர்ம நபர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள பரிசோதனை கூடத்தின் அறையின் பூட்டையும் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு எந்தப் பொருட்களும் இல்லாததால் மர்ம நபர்கள் அப்படியே விட்டுவிட்டனர். 

அதனைத் தொடர்ந்து சத்துணவு கூட அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த முட்டையை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பெற்றோர் –  ஆசிரியர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கேண்டீன் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களையும், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா ஹலன் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்லத்துரை ஆகியோர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் பள்ளிக் கூடத்தில் புத்தகங்களை எரித்துவிட்டு 20 ஆயிரம் கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

click me!