
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி: திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் உஷாராக இருங்கள். தொகுதிகளை எல்லாம் குறைத்து விடுவார்கள். கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்க கூட்டணி கட்சிகளுக்கு வக்கில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் வேட்டு வைக்கிறார்.
திமுக கூட்டணி கட்சிக்கு அழைப்பு
விழுப்புரத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கும், திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா? கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். அதிமுக கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.
திருமாவளவன்
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் குழப்பத்தை எற்படுத்தவே எடப்பாடி பழனிசாமி அழைக்கிறார். கூட்டணிக்கு வாருங்கள் என இபிஎஸ் சொல்வது அவர் கருத்தாக இல்லை யாரோ சொல்வதை திருப்பி கூறுகிறார். நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
முத்தரசன் பதிலடி
இந்நிலையில் இபிஎஸ்க்கு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சேர்ந்திருக்கும் பாஜக ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம். அதன் ஆபத்தை உணர்ந்தும் தனக்கு இருக்கும் நெருக்கடியால் அதில் பயணிக்கிறார். கோவையில் கம்யூனிஸ்ட்டுகளே இல்லை என்று சொன்னவர் சிதம்பரத்தில் எங்கள் கட்சியை கூட்டணிக்கு அழைக்கிறார்.
2025ன் சிறந்த நகைச்சுவை
ஒரு வாரம் இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என தெரியவில்லை. சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை. 2025ன் சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமி சொல்லிய இந்த நகைச்சுவைதான். தேசிய கல்விக் கொள்ளையை அதிமுக ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி நேரடி பதிலடி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.