Munnar : கேரளா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவை பொருத்தவரை ஜூன் மாத முதல் வாரத்தில் இருந்தே பருவமழை துவங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டும், ஜூன் மாத துவக்கத்திலிருந்தே பருவமழை கேரளாவில் பரவலாக பெய்ய துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை, கேரளாவின் வயநாடு பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் பருவமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தமிழக மற்றும் கேரள எல்லை பகுதியில் பல இடங்களில் சிறியதும், பெரியதுமாக பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மூணாறு பகுதியில் உள்ள ராமசாமி அய்யர் ஹெட்ஒர்க்ஸ் அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்பொழுது அதிலிருந்து நீர் நிரம்பி வழிவதால், அதை சுற்றியுள்ள ஆத்துக்காடு, பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாளங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் சாலைகளும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் அந்த சாலைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூணாறில் இருந்து உடுமலை செல்லும் சாலையில், ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் மூடப்பட்டுள்ளது. அதே போல மூணாறில் இருந்து தேனி மற்றும் கொச்சி செல்லும் சாலைகளிலும் நிலச்சரிவால் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு பயணிக்க கூட வழியில்லாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இடுக்கி மாவட்ட மீட்பு குழுவினர் தற்பொழுது சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தொடர்ந்து கனமழை அங்கு பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கேரளாவை மீண்டும் சோதிக்கும் இயற்கை.. அலை ரூபத்தில் வரும் ஆபத்து - ஆய்வு மையம் எச்சரிக்கை!