முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முல்லை பெரியாறு அணை நீர் தேக்கத்திற்கு ஒரு கிமீக்கு அப்பால் கார் பார்க்கிங் அமைந்துள்ளது. இந்த கார் பார்க்கிங் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு அருகே இருப்பதால், வாகனங்கள் எழுப்பும் சத்தம் வனவிலங்குகளை குறிப்பாக புலிகளை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது என வனத்துறை கேரள அரசிடம் கூறியுள்ளது.
இதனையடுத்து, முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்க 2013ஆம் ஆண்டில் கேரள அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்க கேரள அரசு தேர்வு செய்துள்ள இடம் தமிழக அரசுக்கு ஒப்பந்தத்திற்கு அளித்துள்ள நிலம். எனவே, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீண்டகாலமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம்!
அதன்படி, இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1886ஆம் ஆண்டில் போடப்பட்ட பெரியார் ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்ட இடத்தில்தான் கார் பார்க்கிங் கட்டப்பட உள்ளதா என சர்வே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.