அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேலு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வடிவேலு மரணம்
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் ஆர்.வடிவேலு, வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பத்தைச் சேர்ந்தவ அவர், கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை 19 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அதிமுகவில் விவசாய அணியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 82வயதான வடிவேலு கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார் இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இவரது உடல் அடக்கம் இன்று மாலை சம்பந்திகுப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக விவசாயப் பிரிவு முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. R. வடிவேல் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் திரு. வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்