சிறை வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை உடனே விடுவிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் வழக்கு…

First Published Feb 9, 2017, 11:55 AM IST
Highlights


அதிமுகவில் 110-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.

“சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் மாற்றுத் துணி கூட இல்லாமல் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். தலை விதியே! என்று அவர்கள் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கின்றனர்.” என அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதே விஷயத்தை முன் நிறுத்தி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்களே சொல்கிறீர்கள் எம்.எல்.ஏக்கள் சொகுசு ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று, அப்படியென்றால் எம்.எல்.ஏக்கள் சொகுசாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பாலு, சொகுசாக தங்குவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிய விஷயமில்லை. அவர்கள் சுதந்திரமாக இல்லை என்பதும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதும் தான் முக்கியமான விஷயம். செல்போன் பேச கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலு கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த ஜெயச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர். எம்.எல்.ஏக்களை மீட்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!