சீரான குடிநீர் விநியோகம் கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் வருகை...

First Published Apr 24, 2018, 9:01 AM IST
Highlights
More than 50 people to ask for drinking water supply


ஈரோடு 

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஈரோடு ஆட்சியரிடம் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள ஓட்டப்பாறை காலிக்காவலசு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். 

அந்த மனுவில், "நாங்கள் 160 வீடுகளில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே உள்ளது. 

இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை தொட்டியில் நிரப்பப்பட்டு எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆழ்துளை கிணற்றில் சரிவர தண்ணீர் இல்லை. இதனால் வாரத்துக்கு ஒருமுறை அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் ஒரு குடும்பத்துக்கு எட்டு குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரை வைத்து எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து எங்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். 

அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


 

click me!