
ஈரோடு
மொடக்குறிச்சி கிராம மக்கள் தங்கள் பகுதியில் சாராய கடையை திறக்கக் கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
அதன்படி, மொடக்குறிச்சி அருகே உள்ள பெரலிமேடு, டி.மேட்டுப்பாளையம், பெருமாபாளையம், குட்டைகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆட்சியர் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், "எங்கள் பகுதியில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு, தனியார் பள்ளிக் கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
தற்போது குட்டைகாடு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடையை வருகிற 1-ஆம் தேதி திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சாராயக் கடை அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாகத்தான் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். எனவே, இங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் குடிகாரர்களால் மாணவ - மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே, குட்டைகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாராயக் கடையை திறக்கக்கூடாது" என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதேபோல பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 259 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.