
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள கொண்டையம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. அந்தப் பகுதியில் புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னந்தோப்பு உள்ளது.
இந்த தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. இதனை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து அவர்கள் புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு காவலாளர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், "அந்த தென்னந்தோப்பில் கடந்த சில நாள்களாக இளநீர் மற்றும் தேங்காய்கள் திருடு போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனால் தேங்காய் திருடுவோரை பயமுறுத்துவதற்காக தோப்பு உரிமையாளர்தான் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளை கட்டி தொங்கவிட்டுள்ளார்" என்பது தெரியவந்தது.
அந்த எலும்பு கூடுகள் எங்கிருந்து பெறப்பட்டது? என்று காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.