
மணப்பாறை
துவரங்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகரை வெளியேற கூறி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற தீபா பேரவையைச் சேர்ந்த 22 பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்த எம்எல்ஏ-க்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஆர்.சந்திரசேகரும் சசிகலாவை ஆதரிப்பதால் அவருக்கும் கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதனால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை துவரங்குறிச்சியில் நடைபெற்ற அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீபா பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில் அப்பேரவையை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையம் அருகே கருப்புச் சட்டை, கருப்பு பட்டை அணிந்திருந்ததோடு, சிலர் கையில் கருப்பு துணியும் வைத்திருந்தனர்.
அவர்கள் எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நிற்கிறார்கள் என்பதை அறிந்த துவரங்குறிச்சி காவலாளர்கள், அங்கு வந்து தீபா ஆதரவாளர்களை கைது செய்து, வேனில் ஏற்றினர்.
அப்போது தீபா பேரவையைச் சேர்ந்தவர்கள், சந்திரசேகர் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.