செக்கு உரலில் பாதுகாக்கப்பட்ட 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு…

First Published Feb 27, 2017, 9:22 AM IST
Highlights
The inscription on the preserved 10th-century invention of the word mortar ...


தேனி

பட்டிவீரன்பட்டி அருகே செக்கு உரலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த 10–ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ், மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்களான உதயகுமார், பாண்டிஸ்வரன் ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு பகுதியில் ஓவா மலைப்பகுதியில் கள ஆய்வு நடத்தினர்.

அந்த கள ஆய்வில், கி.பி. 10–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று செக்கு உரலில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த வட்டெழுத்து கல்வெட்டு குறித்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் பேராசிரியர் சாந்தலிங்கம் கூறியது:

“இந்த செக்கு உரல் கல்வெட்டில், வட்டெழுத்து தமிழ்மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிப்புகள் காணப்படுகிறது. இந்த உரலை வெண்பி நாட்டில் குறண்டி என்னும் ஊரைச் சேர்ந்த கோமன் அருளன் என்பவர் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

குறண்டி என்பது இன்றைய மதுரை – அருப்புக்கோட்டைச் சாலையில் ஆவியூருக்கு அருகில் இருக்கும் ஊராகும். மேலும் இந்த ஊரில் வரலாற்று சிறப்பு மிக்க பராந்தகபருவதம் என்னும் மலையில் திருவல்லப்பெரும்பள்ளி, திருக்காட்டாம்பள்ளி என்ற பெயர்களில் 9 மற்றும் 10–ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது. இதன் மூலம் குறண்டி என்பது வரலாற்று பழமை வாய்ந்த ஊர் என்பதை அறிய முடிகிறது.

இந்த செக்கு உரலில் எடுக்கும் துடவு எண்ணெயை மன்றத்து மாராயனுக்கு வழங்க வேண்டாம் என்பவன் பாவத்தை கொள்வான் என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. துடவு என்பது ஒருவித முகத்தலளவை குறிக்கும் சொல்லாகும். மாராயன் என்பது அந்த காலத்தில் அரசாங்க நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒருவித பட்டமாகும்.

எனவே இந்த “கல்வெட்டில், மாராயன் என்ற அதிகாரிக்கு இந்த செக்கு உரல் மூலமாக எடுக்கப்படும் எண்ணெயை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்துக்கு உட்படுவார்கள்” என்று எச்சரிக்கையும் இந்த கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு மூலம் கி.பி. 9 மற்றும் 10–ஆம் நூற்றாண்டில் அடர்ந்த இம்மலைப் பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும், அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் இந்த வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

tags
click me!