
தஞ்சாவூர்
தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடைப்பெற்ற சல்லிக்கட்டுப் போட்டியில், கொம்பு வைத்த சிங்கங்களாய் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், 272 காளைகளும், 213 வீரர்களும் கலந்து கொண்டன. இதில் வீரர்கள் உள்பட 47 பேரை காளைகள் பதம் பார்த்தன.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். தடைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்தபடவில்லை.
இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நடத்திய புரட்சியால் சல்லிக்கட்டு கைகூடியது.
பின்னர், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் சல்லிக்கட்டுக்கான தடை முழுவதும் நீக்கப்பட்டு தற்போது ஆங்காங்கே சல்லிக்கட்டு நடந்துக் கொண்டிருக்கிறது.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக நடத்தப்படும் சல்லிக்கட்டு திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவில் நேற்று நடைப்பெற்றது.
திருக்கனூர்பட்டி விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் இந்த சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசலில் இருந்து சிறிது தூரம் வரை 1 அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன.
அதே போல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாதபடி, இரும்பு தடுப்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த சல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தஞ்சை, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே கொண்டுவரப்பட்டன. மாடு பிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர்.
மாடு பிடி வீரர்களுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் காளைகளை அடக்க வந்திருந்த வீரர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்றும் சோதனை நடத்தப்பட்டது. தகுதியில்லாத வீரர்கள் மாடு பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் சோதனை நடத்தப்பட்டது. பின்பு மாடு பிடி வீரர்கள் மத்தியில் ஆட்சியர் அண்ணாதுரை உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பிறகு காலை 9 மணிக்கு ஆட்சியர் அண்ணாதுரை கொடி அசைத்து சல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை திறந்து விடப்பட்டது. அந்த மாட்டை யாரும் பிடிக்கக்கூடாது. அதன்பின், வரிசையாக ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன. ஒரு காளையை ஒருவீரர் மட்டுமே அடக்க வேண்டும். மாறாக குழுவாக சேர்ந்து அடக்கினால், பரிசு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது.
சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் சில காளைகளை நெருங்கவே முடியவில்லை. அவை தன்னை நெருங்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கி பந்தாடின. அப்போது தடுப்பு கம்பிகள்மீது வீரர்கள் ஏறி நின்று கொண்டனர். அடக்க வந்த வீரர்களை சில காளைகள் முட்டி தள்ளின.
அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. சைக்கிள், குத்துவிளக்கு, குடை, எவர் சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், ரொக்கம் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன.
331-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 213 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதையடுத்து சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
சல்லிக்கட்டையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தீயணைப்பு வீரர்களும் போட்டி ஆரம்பித்ததில் இருந்து தயார் நிலையில் இருந்தனர்.
சல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. சல்லிக்கட்டில் பங்கேற்க 566 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 272 காளைகள் மட்டும் விடப்பட்டன. வந்திருந்த காளைகளில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் விடப்படவில்லை.
சல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடு பிடி வீரர்களில் 24 பேருக்கும், பார்வையாளர்கள் 23 பேருக்கும் என மொத்தம் 47 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 18 பேர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு சல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குருமூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் மற்றும் திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சேவியர், செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ், பொருளாளர் பிலிப், கௌரவ தலைவர்கள் ஆரோக்கியசாமி, தனிஸ்லாஸ் மற்றும் விழாக் குழுவினர், கிராம நிர்வாக கமிட்டியினர், பொதுமக்கள் என பெரும் கூட்டம் கலந்து கொண்டது.