
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராமத்தினர் வரும் ஒன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச அனுமதி கோரியிருந்தனர்.
இன்றைய தினம் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். ஆனால், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக போராட்டக்காரர்களை முதலமைச்சரால் சந்திக்க முடியவில்லை என்று, நெடுவாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரை சந்திக்க மார்ச் 1 ஆம் தேதி, புதன் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, 6 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளனர்.