
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் எனவும், கூறி இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
எந்தவொரு திட்டமும் மக்களுக்காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கதக்கது அல்ல.
தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களில் கொண்டுவர மறுப்பது ஏன்?
இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை வெளிப்படையாக அறிவித்து சரியான திட்டம்தான் என சந்தேகமின்றி நிரூபித்து அதனை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை தேமுதிக ஆதரிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிந்த பிறகு திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தாவே தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் 3 , 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
அவ்வாறு தொடங்கியிருந்தால் அதனை செயல்படுத்தாமல் உடனடியாக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். கடன் தொல்லையாலும் தண்ணீர் இன்றி வறட்சியாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் அவர்களை பாதிப்பு அடையாமல் செய்ய ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகளை காப்பாற்றுவது நமது கடமை.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.