
ஆண்டிப்பட்டி பகுதியில், சாலைகளில் இருக்கும் பட்டுப்போன மரங்கள் இப்போ விழுமோ? எப்போ விழுமோ? என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பதற்றத்தில் இருக்கின்றனர்.
ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். இங்குள்ள சாலைகளின் இருபுறங்களிலும் பழமையான புளியமரங்கள் அதிகமாக உள்ளன. அவை வாகன ஓட்டிகளை வெயிலின் கொடுமையில் இருந்து பாதுகாக்கிறது.
இப்போது இருக்கும் கடும் வறட்சியால் அந்த மரங்களில் பெரும்பாலானவை பட்டுப்போய் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் சில பகுதிகளில் கிளைகள் முறிந்து தொங்கிய படி இருக்கின்றன.
அதிலும், குறிப்பாக ஆண்டிப்பட்டி நகர் சக்கம்பட்டி கூட்டுறவு சங்க பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரத்தில் ஒரு பெரிய புளியமரம் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்பதுபோல் உள்ளது.
இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் அந்த மரம் முறிந்து வாகனங்கள் மீது விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அந்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சாலையோரங்களில் பட்டுப்போய் நிற்கும் மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.