2024 மக்களவை தேர்தலுக்கு ரெடியாகும் திமுக! பாட்காஸ்ட் சீரிஸ் தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By SG Balan  |  First Published Sep 3, 2023, 9:22 PM IST

பாஜக ஆட்சியின் குறைகளையும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத் திட்டங்களையும் முன்வைத்து பேசும் ஆடியோ தொடர் நிகழ்ச்சியைத் தொடங்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.


2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்காக சொந்த போட்காஸ்ட் சேனல் ஒன்றை தொடங்க உள்ளார். ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்று அழைக்கப்படும் இந்த போட்காஸ்ட் ஒலிபரப்பு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறப்படுகினது.

ஆகஸ்ட் 31 அன்று ஸ்டாலின் ட்வீட் செய்த ஒரு வீடியோவில், “திமுக அதன் 75 வது வயதை நெருங்கும் பழமையான கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்ற தலைவர்களால் தேசிய அளவில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ள கட்சி. இப்போது இந்தியாவுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2024இல் பாஜக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது." என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக எந்த வழிகளில் இந்தியாவை அழித்திருக்கிறது? எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பப் போகிறோம்? இந்தப் பிரச்னைகளைப் பற்றி ஒரு ஆடியோ தொடரில் பேசப் போகிறேன்" என்று அறிவித்தார்.

‘தெற்கிலிருந்து குரல்’ என்ற தலைப்பில் தொடக்க உரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் தனது கட்சியின் இருப்பை உறுதிப்படுத்த மு.க.ஸ்டாலினின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (PEN) நிறுவனம் இந்த பாட்காஸ்ட் உரைகளைத் தயாரிக்கும்.

இந்த நிறுவனம் தான் திமுகவின் அரசியல் விவகாரங்கள் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். "இது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடந்த 9.5 ஆண்டு கால தோல்விகளை எடுத்துக் கூறுவதுடன் போட்காஸ்ட் தொடங்கும். மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் பாஜக என்னென்ன செய்தது என்பது குறித்து முதல்வர் பேசுவார் எனக் கூறப்படுகிறது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதளான முரசொலியில் பொதுமக்களுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதங்களின் நீட்சியாக இந்த போட்காஸ்ட் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

“எதிர்கால அத்தியாயங்களில், மு.க.ஸ்டாலின் தவிர விருந்தினர்களும் பேச்சாளர்களாகப் பங்கேற்பார்கள். பொதுமக்களின் கேள்விக்கான பதில்கள், முந்தைய அத்தியாயங்களுக்கான எதிர்வினைகள் ஆகியவையும் இடம்பெறும். எபிசோடுகள் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஒலிபரப்பப்படும். இது பின்னால் மாறவும் வாய்ப்புள்ளது" என பாப்புலஸ் எம்பவர்மென்ட் நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவிக்கிறார்.

இந்த பாட்காஸ்ட்களை ஸ்பாட்டிஃபை (Spotify) போன்ற டிஜிட்டல் தளங்களில் கேட்க முடியும். இளம் மாணவர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட உள்ளன. யூடியூப் உள்ளிட்ட ஸ்டாலினின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களிலும் ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for India) பாட்காஸ்ட் ஒலிபரப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

click me!