சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது வரலாற்றில் முதன்முறையாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹிரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட்டின் மூலம் நேற்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைகோள் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, தற்போது அதன் முதல் புவி சுற்றுவட்டப் பாதையும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ, ஆதித்யா எல்1 மூலம் வரலாற்றின் அடுத்த மைல்கல் சாதனையை படைக்க தயாராகி வருகிறது. ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி என்பவர் உள்ளார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் செங்கோட்டையில் உள்ள திரு இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த நிகர் ஷாஜி, அறிவியல் மீதிருந்த மீதான ஆர்வம் காரணமாக திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் படித்தார். 1987 ஆம் ஆண்டில் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த அவர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில்… https://t.co/xjJaQjTxwm
தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை உயரம் அதிகரிப்பு - இஸ்ரோ தகவல்!
முன்னதாக, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்3 திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியது. சந்திரயான்3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் என்பவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். அதேபோல், சந்திரயான்2இன் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் வனிதா முத்தையா. அந்தசமயத்தில் இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் சிவன். இவர்கள் இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான, சந்திரயான்-1-இன் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.