
திமுக சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''இந்த மாநாட்டில் கருப்பு, சிவப்பு கடல் போல் ஒன்றரை லட்சம் பெண்கள், தாய்மார்கள் குவிந்துள்ளனர். உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது. பெண்களின் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க போகிறது.
கனிமொழியின் முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். ஆனால் தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பார். தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. அந்த ஹீரோவை தலைமை தாங்கி தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்றுளார். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. பெண்களை படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். அடிப்படியை தாண்டி செல்லவில்லை. ஆனால் இதை மாற்றியது தான் திராவிட இயக்கம். பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுத்தது திராவிட இயக்கம் தான்.
பெண்களுக்கு உரிமை வாங்கிக் கொடுத்தது திமுக தான். தேவதாசி முறையை ஒழித்தோம். பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தோம். மத்திய அரசின் 33% சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதவை பாஜக பெயரளவுக்கு நிறைவேறியுள்ளது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று சொல்ல முடியாது. சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவதை பாஜக விரும்பவில்லை. ஆனால் திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி. பெண்கள் மனநிறைவுடன் இருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுயமரியாதை
ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுத்து வருகிறோம். இது பெண்களுக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. இதேபோல் விடியல் பயணத்தால் மகளிக்கு ரூ.1,000 கூடுதலாக மிச்சமாகிறது. 900 கோடி முறை பெண்கள் விடியல் பயணத்தில் பயணம் செய்துள்ளனர். இப்படி பெண்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி.
பாஜகவினரே கூச்சப்படும் அளவுக்கு முட்டுக் கொடுக்கும் பழனிசாமி
ஆனால் பாஜக அரசு பெண்களுக்கு உதவியாக இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் கிராமப்பொருளாதாரமும், பணப்புழக்கமும் அடிவாங்கப் போகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு ஒத்து ஊதுகிறார். 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி விட்டார்கள் என பச்சைப்பொய் சொல்கிறார். கமலாலயம் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக லெட்டர் போர்டில் வெளியிடுகிறார் இபிஎஸ். பாஜகவினரே கூச்சப்படும் அளவுக்கு முட்டுக் கொடுக்கிறார் பழனிசாமி'' என்று தெரிவித்துள்ளார்.